புதுடெல்லி: டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தின் முதல் முனையத்தின் மேற்கூரை நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கிருந்த கார்கள் நசுங்கின. தீயணைப்பு வீரர்கள் காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி விமான நிலையத்தின் ஒரு முனையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.
டெல்லியில் பெய்த கனமழையால் கார் மழைநீர் கால்வாயில் கவிழ்ந்தது. டெல்லியில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை 228 மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 1936-ம் ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதம் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது. 88 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மழை வரலாறு காணாத அளவு. 1936-ம் ஆண்டு ஜூன் மாதம் 235.5 மிமீ மழை பதிவானது.
டெல்லி-என்சிஆர் (டெல்லி-தேசிய தலைநகர் மண்டலம்) பகுதியில் மழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அசோகா சாலை, பெரோஷா சாலை மற்றும் கன்னாட் பிளேஸ் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. இதேபோல் நொய்டா உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டன.
டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜூன் மாதத்தில் டெல்லியில் சராசரியாக 80.6 மி.மீ மழை பெய்யும். ஆனால் இம்முறை 228 மி.மீ. மழை பெய்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், டெல்லி நகரில் போதிய மழைநீர் வடிகால் அமைப்பு இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பருவமழையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளதாக டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் கடந்த 18-ம் தேதி பேட்டி அளித்திருந்தார். வெள்ள வடிகால்கள் சுத்தமாக இருப்பதாகவும், பருவமழையை எந்த பிரச்சனையும் இல்லாமல் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வடிய வாய்ப்பில்லாமல் டெல்லி நகரம் தத்தளித்து வருகிறது. இந்த மழையால், டெல்லியில் வெப்பநிலை இயல்பை விட 3.2 டிகிரி குறைவாக 24.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
2 மாதங்களாக நிலவி வரும் கடும் வெயிலில் இருந்து தணியும் வகையில் மழை பெய்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.