பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்க முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உ.பி அரசு பயன்படுத்துகிறது.
பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார், அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் எத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு வருகின்றனர். மேலும், பக்தர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களும் களத்தில் இருந்து பெறப்பட்டு வருகிறது.