டெல்லியில் தொடர்ந்து அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று 130 விமானங்களும், 27 ரயில்களும் தாமதமாக வந்தன. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை 130 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான சேவைகள் தாமதமானது தொடர்பான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு டெல்லி விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். இண்டிகோ தனது பயணிகளுக்கு நேற்று வெளியிட்ட அறிவுரையில், “அடர்த்தியான மூடுபனி காரணமாக விமானங்கள் வருவதிலும் புறப்படுவதிலும் தாமதம் ஏற்படலாம்.
எனவே, விமான நிலையத்தை அடைவதற்கு முன் உங்கள் விமான நேரத்தைச் சரிபார்க்கவும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று மொத்தம் 27 ரயில்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று காலை டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 294 (மோசமாக) இருந்தது.
கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரக் குறியீடு மோசமான நிலையை எட்டியதை அடுத்து டெல்லியில் கிராப்-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போதிருந்து, டெல்லியில் கிராப்-3 அல்லது கிராப்-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டன.