பெங்களூரு: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுப்பதற்காக கர்நாடகாவில் இன்று (ஜூலை 14) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன், காணொலி காட்சி மூலம் நடந்த காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இம்மாத இறுதி வரை தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் இன்று (ஜூலை 14) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், காவிரி கரையோர மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்ப்பு
தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல் குழு ஆலோசனை நடத்தியது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை கர்நாடக அரசு எதிர்க்கிறது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.