அகமதாபாத்: குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடிக்கல் நாட்டினார். இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு கழகம் (IFFCO) தொழிற்சாலை குஜராத்தின் காந்திநகரில் உள்ள கலோல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிறுவன வளாகத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா இங்கு விதை ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:- முன்பெல்லாம் உரங்களின் விலை அதிகமாகவும், விளைச்சல் குறைவாகவும் இருந்தது. ஆனால் IFFCO அதை மாற்றிவிட்டது. IFFCO உரங்களை குறைந்த விலையிலும் அதிக செயல்திறனிலும் வழங்குகிறது. உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இந்த சாதனையில் IFFCO க்கும் பங்கு உண்டு.

IFFCO ஆனது விவசாயிகளை உரங்களுடன் இணைப்பது மட்டுமல்லாமல், உரங்கள் மற்றும் கூட்டுறவுகளுக்கு இடையே வலுவான தொடர்பை உருவாக்கியுள்ளது. இப்போது அமைக்கப்படும் விதை ஆராய்ச்சி மையம் விதைகளின் தரத்தை மேம்படுத்தும். வீரியமுள்ள விதைகள் மூலம் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும்.
மேலும், இந்த விதைகளுக்கு சாகுபடியின் போது குறைந்த அளவு தண்ணீர் மற்றும் உரங்கள் மட்டுமே தேவைப்படும். விதை ஆராய்ச்சி மற்றும் தன்னிறைவு விவசாயத்தில் இந்த விதை ஆராய்ச்சி மையம் திருப்புமுனையாக அமையும், என்றார்.