கேரளாவில் நேக்லேரியா ஃபவுலேரி மற்றும் சேப்பினியா பேடேட்டா எனப்படும் ஆபத்தான அமீபாக்கள் பரவி வருவதால் பெரும் அச்சம் நிலவுகிறது. இந்த அமீபாக்கள் மனிதர்களின் மூக்கின் வழியாக நுழைந்து மூளையைத் தாக்கி, ‘அமீபிக் மெனிஞ்சோசெபலைட்டிஸ்’ எனப்படும் ஆபத்தான நோயை ஏற்படுத்துகின்றன. இதனால் காய்ச்சல், தலைவலி, குமட்டல், குழப்பம் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக காணப்படுகின்றன.

இந்த வருடம் இதுவரை மட்டும் கேரளாவில் 41 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்த தொற்று உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடியதாக இருப்பதால், மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, கேரள அரசு சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த உள்ளது. ஆகஸ்ட் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த பிரச்சாரத்தின் மூலம், கிணறுகள், நீர் டேங்க்கள், குளங்கள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. நீச்சல் குளங்களில் குளோரின் கலக்கப்பட வேண்டும் என்றும், ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளும் கடுமையான சுத்தம் பராமரிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் குளம், குட்டை போன்ற இடங்களில் நீந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதே நோக்கமாகும். மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகள், உயிரிழப்பை தடுக்க முக்கிய பங்காற்றும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.