தெலுங்கானாவில் அனைத்து மதுக்கடைகளும், பார்களும் தனியாருக்குச் சொந்தமானவை. இந்நிலையில், மேதக் மாவட்ட தலைநகரில் கனகதுர்கா ஒயின்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் உரிமையாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் இரவு வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அதன்பின், நள்ளிரவில், கடையின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை உடைத்து, கடைக்குள் குதித்த திருடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் கம்பிகளை அறுத்துள்ளார்.
அதன்பின், இரவோடு இரவாக பணப்பெட்டியில் கிடந்த பணத்தை எடுத்து பாக்கெட்டில் போட்டார். தனது பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்த திருடன், மீண்டும் கடையை விட்டு வெளியேறும் முன் அங்கிருந்த மதுபாட்டில்களைப் பார்த்தான். அதில் ஆசை வந்து குடிக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றாக குடித்தபடியே போதை ஏறியது. அதன் பிறகு அதே கடையில் தன்னை மறந்து தூங்கினார்.
மறுநாள் வரை அவர் எழுந்திருக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் திங்கள்கிழமை காலை கடை உரிமையாளர் கடையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். கடையில் திருடன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஊழியர்களை அழைத்தார். அவரை சோதனையிட்டபோது, அவர் கடையில் இருந்த பணத்தை திருடி உள்ளே செல்வதற்காக மேற்கூரையை உடைத்து, கண்காணிப்பு கேமராக்களை முடக்கியது தெரிய வந்தது. உடனடியாக மேதக் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வந்து மயங்கி கிடந்த திருடனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.