திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எப்போதும் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொதுமக்களுக்கு சேவை வழங்க தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோருக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்காக ஆந்திர அரசு மெட்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து சான்றிதழ்களையும் பொதுமக்கள் வீட்டிலிருந்தே வாட்ஸ்அப் செயலி மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப் செயலி மூலம் 161 வகையான அரசு சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.
மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் நேற்று உண்டவல்லியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புரம் மன மித்ரா என்ற வாட்ஸ்அப் நிர்வாக சேவையை தொடங்கி வைத்தார். அப்போது, அமைச்சர் லோகேஷ் கூறியதாவது: ஆந்திராவில் பொதுமக்கள் அனைத்து அரசு சான்றிதழ்களையும் வாட்ஸ் அப் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 9552300009 என்ற வாட்ஸ்அப் சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களுக்கு சிவில் சேவைகளை வழங்க ஆந்திர அரசு முயற்சி எடுத்துள்ளது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் மூலம் 161 சேவைகள் வழங்கப்படும். இதில், இந்து சமய அறநிலையத் துறை, மின்துறை, போக்குவரத்துக் கழகம், வருவாய்த் துறை, அண்ணா உணவகம், நகராட்சித் துறை ஆகியவற்றின் சேவைகளை பொதுமக்கள் பெறலாம்.
இதன்மூலம், சான்றிதழ் பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் நடைமுறைக்கு ஆந்திர அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. விரைவில் திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளும் இதன் கீழ் கொண்டு வரப்படும். வருவாய்த் துறை மூலம் பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்களின் தற்போதைய நிலை, பத்திரப் பதிவுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல், ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட முக்கியச் சான்றிதழ்களைப் பெறுதல் போன்றவற்றையும் இந்த சேவையின் மூலம் பெறலாம். உலகிலேயே முதன்முறையாக ஆந்திராவில் இந்த சேவை கொண்டுவரப்படுகிறது என்றார்.