
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பதற்றமான சூழலில், சீனாவைச் சேர்ந்த நால்வர் இந்திய எல்லையை தாண்டியதாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள ரக்சௌல் பகுதியில் நிகழ்ந்தது. மைத்ரி பாலம் அருகே, தரையா காவல் நிலைய எல்லைக்குள் நுழைந்த நால்வரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்தனர்.அவர்களை கைது செய்த போலீசார், விசாரணை மூலம் அவர்கள் சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டேன் விஜோன், லின் யுங்காய், ஹே யுன் ஹேன்சென் மற்றும் குவாங் லிங் என்ற பெயர்களை கொண்டுள்ளனர்.இந்த விசாரணையை நேரில் கண்காணித்து வரும் ரக்சௌல் டிஎஸ்பி தீரேந்திர குமார், அவர்கள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கக்கூடிய சந்தேகம் இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது
இந்த சம்பவம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் ஏற்கனவே பதற்றமான சூழலுக்கு மேலும் கவனத்தை ஈர்க்கிறது. கடந்த வாரம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை முன்னெடுத்து, பலவந்த பதிலடி கொடுத்தது.இதனால் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், வெளிநாட்டு நபர்கள் அனுமதி இல்லாமல் நுழைவது பாதுகாப்பு பிரச்சனையாக மாறியுள்ளது.
கைது செய்யப்பட்ட சீனர்கள் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். விசாரணை முடிவில் அவர்களின் நுழைவு நோக்கம் தெளிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் சீனாவுடனான உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் போலீசாரும் ராணுவமும் முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர்