புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். நேற்று நடந்த ஆம் ஆத்மி நிர்வாகிகள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன்.
மக்கள் மீண்டும் எனக்கு வாக்களித்த பின் மீண்டும் பதவியில் அமர்வேன்,” என்றார். டெல்லி சட்டசபைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கெஜ்ரிவால் இதனை அறிவித்தார்.
அதன்படி இன்று அவர் பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் சக்சேனாவை கெஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
இந்நிலையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு நேற்று இரவு கூடி முக்கியக் கூட்டம் நடத்தியது.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் நேற்று கூறியதாவது:-
கெஜ்ரிவாலின் ராஜினாமா ஏற்கப்பட்டதும், புதிய முதல்வரை தேர்வு செய்ய, ஆம் ஆத்மி கட்சி சட்டசபை கூட்டம் நடத்தப்படும். மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் எங்களிடம் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புதிய அரசை அமைக்கலாம்.
இந்த நடைமுறைகள் ஒரு வாரத்தில் முடிவடையும் என்று நம்புகிறேன். கெஜ்ரிவாலுக்குப் பதிலாக யார் வருவார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு சவுரப் பரத்வாஜ் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி விதிகளின்படி, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கட்சி நிர்வாகி மற்றும் அரசு பதவியை வகிக்க முடியும். இந்த விதியில் கடந்த 2021-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு பதவிகளை வகிக்க முடியும்.
இதை பயன்படுத்தி கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை முதல்வராக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தின் பெரும்பான்மை ஜாட் இனத்தவரான கவர்ஜட் சமூகத்தை சேர்ந்த கைலாஷ் கெலாட்டை டெல்லி முதல்வராக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.