புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறையினர் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தனர். உச்ச நீதிமன்றம் ஜூலை 12ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதனிடையே, இந்த ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கில் ஜூன் 26ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஜூலை 29ம் தேதி அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.சிபிஐ கோரிக்கையை ஏற்று நீதிபதி காவேரி பவேஜா கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால்கிருஷ்ணா கடந்த 5ம் தேதி நிராகரித்தார். “சட்டவிரோதமான அல்லது நியாயமான காரணமின்றி கைது செய்யப்பட்டதாகக் கூற முடியாது,” என்று அவர் கூறினார். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர மனுவாகப் பட்டியலிடுமாறு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டை நேற்று கேட்டுக் கொண்டார். இதற்கு, “இந்த கோரிக்கை தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பவும். பரிசீலிப்பேன்,” என்றார் தலைமை நீதிபதி.