புதுடில்லியில் நேற்று நடந்த “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் உடல் பருமன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து வெளியிட்டார். ஆய்வறிக்கைகளின்படி, உலகளவில் எட்டில் ஒருவர் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கவலை அளிக்கும் அம்சம் என்னவெனில், குழந்தைகளிடையே இந்த பிரச்சனை அதிகரித்துள்ளது. உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
உணவுக்கான எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைப்பது உடல் பருமனை தடுப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என பிரதமர் மோடி கூறினார். தொடக்கத்தில் உணவுக்கான எண்ணெய் வாங்கும்போது 10 சதவீதம் குறைக்க வேண்டும், பின்னர் படிப்படியாக இதை மேலும் குறைக்க வேண்டும். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, மற்ற 10 பேருக்கும் இதை பரப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடி திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய 10 பேரை தேர்வு செய்துள்ளார். அவர்களில் தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, போஜ்புரி நடிகர் நிராஹுவா ஹிந்துஸ்தானி, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மலையாள நடிகர் மோகன்லால், தொழிலதிபர் நந்தன் நிலேகனி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நடிகர் மாதவன், பாடகி ஸ்ரேயா கோஷல், மற்றும் ராஜ்யசபா எம்.பி. சுதா மூர்த்தி ஆகியோர் அடங்குவர்.
இந்த பிரபலங்கள் தலா 10 பேருக்கு இதே சவாலை விடுத்து உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.