நாடு முழுவதும் இன்று மற்றும் நாளையும் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த நிலையில், வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி, அனைத்துப் பணியிடங்களும் பணியாளர் தேர்வில் சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு முன்வைத்திருந்தது. இதுதொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், வங்கி ஊழியர்கள் மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால், வங்கிகள் இன்று செயல்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த வேலைநிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கங்கள் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளன.
வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், இந்தியா முழுவதும் வங்கிகள் இன்று, திங்கள், மார்ச் 24ஆம் தேதி வழக்கம் போல் செயல்படும். ரிசர்வ் வங்கியின் பேச்சுவார்த்தைக்குட்பட்ட ஆவணச் சட்டத்தின் கீழ் இன்று வங்கி விடுமுறை இல்லை. இதனால், வங்கிக் கிளைகள் எந்தத் தடையும் இல்லாமல் திறந்து இயங்கும்.
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் இந்திய வங்கிகள் சங்கம் முடிவெடுக்க வேண்டும் என்றும் சங்கங்கள் நிபந்தனை விதித்துள்ளன. எனவே, இன்று மற்றும் நாளையும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும்.