புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவை பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் பார்வையிட்டார். அவரை உ.பி., அரசு சார்பில், அம்மாநில தொழில் துறை அமைச்சர் நந்து கோபால் குப்தா நந்தி வரவேற்றார். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். முகுடில் நடைபெற்ற ஆரத்தி பூஜையில் ஆளுநர் ஆரிப் முகமது கானும் பங்கேற்றார்.
பின்னர், கடற்கரையில் உள்ள சுவாமி பரமானந்த் நிகேதன் முகாமுக்கு ஆளுநர் ஆரிப் சென்றார். முகாமில் கலந்து கொண்ட சிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள், ஆளுநர் ஆரிப் முகமது கானுடன் ஆன்மிக கலந்துரையாடல் நடத்தினார். இதில், இந்து கலாசாரம், கங்கை நதி பாதுகாப்பு, கும்பமேளாவின் முக்கியத்துவம் குறித்தும் கவர்னர் ஆரிப்பிடம் எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், உ.பி அரசின் சிறப்பு பாதுகாப்பு படகில் கவர்னர் ஆரிப் பயணம் செய்தார்.

இது குறித்து ஆளுநர் ஆரிப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இந்திய கலாச்சாரத்தின் சனாதனத்தை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இதனால், நம்மிடையே உள்ள வேறுபாடுகள் அனைத்தும் மறைந்துவிடும். இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தின் பெருமை மகா கும்பமேளாவில் காணப்படுகிறது. இந்த நிகழ்வின் மூலம், உலகத்திற்கான அமைதி, ஒற்றுமை மற்றும் சமூகப் பணியை இது காட்டுகிறது’ என்று அவர் குறிப்பிட்டார்.
மகா கும்பமேளாவை இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை பிப்ரவரி 26-ம் தேதிக்குள் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.