பீஹாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி முடிவுக்கு வந்து, தேர்தல் கமிஷன் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 7.89 கோடி வாக்காளர்களில் 50 லட்சம் பேர் நீக்கப்பட்டதால், இறுதியாக 7.42 கோடி வாக்காளர்களே உள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளை விட 6 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திருத்தம், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2003ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இத்தகைய தீவிர திருத்தம் நடத்தப்பட்டது. இதில் குடியுரிமை ஆவணங்கள், ஆதார் உள்ளிட்ட சான்றுகள் அவசியம் செய்யப்பட்டதால் பலர் நீக்கப்பட்டனர். இடம் பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள் என 65 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு பட்டியலிலேயே நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் பா.ஜ.,க்கு சாதகமாக செயல்பட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கடுமையாக குற்றஞ்சாட்டின. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஆதார் அட்டை சேர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், தகுதியான வாக்காளர்களின் பெயர் தவறாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 3.66 லட்சம் தகுதியற்றோர் நீக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்கள், 243 தொகுதிகள், ஆயிரக்கணக்கான அதிகாரிகள், தன்னார்வலர்கள், மற்றும் 12 அரசியல் கட்சிகள் பங்கேற்ற இந்த பணியில், தேர்தல் கமிஷன் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டதாக வலியுறுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் 10 நாட்களுக்கு முன்புவரை, புதிய பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.