மண்டி: இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியை சேர்ந்த பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத், தன்னை பார்க்க விரும்பினால், ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என, அத்தொகுதி மக்களுக்கு நிபந்தனை விதித்துள்ளார்.
இது குறித்து பேசிய கங்கனா ரனாவத், “இமாச்சல பிரதேசம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாநிலம். எனவே, எனது தொகுதி மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதற்காக ஆதார் அட்டையுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், என்னைச் சந்தித்ததற்கான காரணத்தையும், தொகுதிப் பிரச்னைகளையும் காகிதத்தில் எழுதி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சுற்றுலா பயணிகளின் வருகையால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
கங்கனாவின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் கங்கனாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங், “கங்கனா ஒரு மக்கள் பிரதிநிதி. எனவே, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது அவரது பொறுப்பு.
எந்த வேலையாக இருந்தாலும், கொள்கை விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட வேலையாக இருந்தாலும், எந்த அடையாளமும் இல்லாமல் மக்கள் அவரை சந்திக்க முடியும். அவரை சந்திக்க ஆவணங்கள் கொண்டு வந்தால் தான் மக்களை சந்திப்பேன் என கூறுவது சரியல்ல,” என கண்டனம் தெரிவித்துள்ளார்.