ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், சட்டப்பிரிவு 370 தொடர்பாக கடந்த 5-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானின் திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் அப்துல் ரஹீம் இருக்கை அருகே பாஜக எம்எல்ஏக்கள் கூடி தீர்மானத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சபாநாயகர் அவர்களை இருக்கையில் சென்று அமரும்படி கூறினார். இருப்பினும் தொடர்ந்து செயல்பட்டனர். இதையடுத்து அவர்களை சபையில் இருந்து வெளியேற்றுமாறு பாதுகாவலர்களுக்கு சபாநாயகர் அப்துல் ரஹீம் உத்தரவிட்டார். இதையடுத்து 11 பா.ஜ.க. எம்எல்ஏக்களும், லங்காட் சட்டமன்ற உறுப்பினர் ஷேக் குர்ஷித்தும் வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக 11 பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5, 2024) 370-வது பிரிவு தொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார். “ஜம்மு மற்றும் மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களின் முக்கியத்துவத்தை இந்த சட்டமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சட்டப்பிரிவு 370 ஐ ஒருதலைப்பட்சமாக ரத்து செய்தது குறித்து இந்த சபை கவலை தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்காக ஜம்மு-காஷ்மீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், அதற்கான அரசியலமைப்பு வழிமுறைகளை உருவாக்கவும் மத்திய அரசை சட்டமன்றம் வலியுறுத்துகிறது.
மறுசீரமைப்புக்கான எந்தவொரு செயல்முறையும் தேசிய ஒற்றுமை மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் நியாயமான அபிலாஷைகள் இரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த சட்டமன்றம் வலியுறுத்துகிறது என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.