அகர்தலா: திரிபுராவில் கடந்த 8ம் தேதி நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது.
திரிபுராவில் கடந்த 8ம் தேதி மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 79.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மேற்கு திரிபுரா மாவட்டத்தில் ஓரிரு இடங்களைத் தவிர மற்ற அனைத்திலும் பாஜக வெற்றி பெற்றது. துக்ளி ஊரக பகுதியில் திப்ரா மோதா கட்சி வென்றது.
மேற்கு திரிபுராவில் 17 ஜில்லா பரிஷத்கள், பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் பஞ்சாயத்து இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் பாஜக வேட்பாளர்கள் அதிக வெற்றி பெற்றுள்ளனர். அம்பாசா மாவட்டத்தில் மட்டும் ஒரு சில தொகுதிகளில் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திரிபுராவில் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் மாணிக் சாகா ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பிறகு 10,000 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படும் என்று திரிபுரா அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, திரிபுரா காவல் துறை, திரிபுரா மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் போன்றவை வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுமாறு மாநில முதல்வர் மாணிக் சாகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.