கேரளா மாநிலம் தற்போது அபூர்வமான ஒரு சுகாதார அச்சுறுத்தலுக்குள் சிக்கியுள்ளது. கடந்த 17 நாட்களில் மட்டும் 41 பேர் “மூளையைத் தின்னும் அமீபா” தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலான 20 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நோய் ஒரு வகையான மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும், மேலும் நீர்நிலைகளில் காணப்படும் அமீபாக்களே இதற்குக் காரணம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கால்நடைகள் குளிக்கும் குளங்கள், மாசடைந்த நீர், பாசிகள் ஆகியவற்றில் இந்த அமீபாக்கள் அதிகமாக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து கிணறுகள் மற்றும் சிறிய நீர்நிலைகள் உட்பட அனைத்து இடங்களிலும் சுத்திகரிப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம், அட்டிங்கல், ஏடவா, வாமனாபுரம் போன்ற பகுதிகளில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் மட்டும் கேரளாவில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்; அதில் மூவர் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது நபர் உயிரிழந்தது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேற்று மட்டும் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் தலா ஒருவர் புதிய நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை பொதுமக்களை நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்குமாறு, குடிநீரை கொதிக்கவைத்து அருந்துமாறு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அரசு, தொற்று பரவலை கட்டுப்படுத்த பலத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போதைய நிலைமை முழுமையான கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.