புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2018-ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு, தற்போது கவர்னர் கைலாசநாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவு:- ஏசி இல்லாத டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.13-ல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ.2-ம், அதிகபட்சம் ரூ.4-ம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.13 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.26-ல் இருந்து ரூ.34 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 8 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டீலக்ஸ் அல்லாத ஏசி பஸ்களுக்கும் ஏசி டவுன் பஸ்களுக்கு நிகரான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டீலக்ஸ் ஏசி பஸ்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12-ல் இருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.36-ல் இருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்குள் ஏசி இல்லாத விரைவுப் பேருந்துகளில் கி.மீ.க்கு ரூ.0.75-ல் இருந்து ரூ.0.98 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீ., வரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரிக்குள் ஏசி விரைவுப் பேருந்துகளில் கட்டணம் ரூ.1.30-ல் இருந்து ரூ.1.69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 25 கி.மீ.க்கு, 50 ரூபாய் வசூலிக்கப்படும். புதுச்சேரி நகரப் பகுதிக்குள் ஏசி வால்வோ பேருந்துகளுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ.1.70லிருந்து ரூ.2.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கி.மீ.க்கு, 54 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. முதல்வரின் அறிவிப்புக்கு பின், ஓரிரு நாட்களில், இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.