மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தில் தொழிலதிபர் மனோஜ் மற்றும் அவரது மனைவி நேஹா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையில், மனோஜ் மீது மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளின் பேரில், அமலாக்க இயக்குனரகம் அவரது 5 சொத்துக்களை சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. மேலும் மனோஜின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனோஜ் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து மனோஜ் கடிதம் ஒன்றை டைப் செய்து ஜனாதிபதி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அனுப்பினார். பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்க இயக்குனரகம் தன்னை துன்புறுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் மனோஜ் தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் இறந்த பிறகு காங்கிரஸ் தலைவர்களும், ராகுல் காந்தியும் எனது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிது பட்வாரி மற்றும் கமல்நாத் ஆகியோர் இது தற்கொலை அல்ல, கொலை என்று கூறியுள்ளனர். மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாஜக மற்றும் அமலாக்க இயக்குநரகத்தால் வற்புறுத்தப்பட்டனர் என்பது அவர்களின் கருத்து.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.