காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்துக்குப் பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று நிகழ்ந்த ஒரு சம்பவம் பலரையும் கலக்கம் அடைய வைத்தது.
தூதரகத்திற்குள் ஒரு நபர் கேக் கொண்டு சென்றதைக் கண்டு நிருபர்கள் சுற்றிவளைத்து கேள்விகள் எழுப்பினர். “இந்த கேக் எதற்காக?”, “யார் ஆர்டர் செய்தார்?”, “இங்கே கொண்டாட்டம் நடக்கவிருக்கிறதா?” என சரமாரியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அந்த தூதரக ஊழியர் பதிலளிக்காமல் மவுனமாக செல்கிற காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் சோகமும் கோபமும் நிறைந்திருக்க, பாகிஸ்தான் தூதரகத்தில் இந்த வகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது சமூக வட்டாரத்தில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், “நாங்கள் இதற்குப் பொறுப்பல்ல” என தொடர்ந்து மறுக்கிறது என்றாலும், இந்த செயல் பலரிடமும் சந்தேகத்தையும் சினத்தையும் தூண்டியுள்ளது.