மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் தான் வாங்கிய சிலிண்டருக்கு ரூ.1.50 அதிகம் பெற்ற கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்து 7 வருடம் போராடி இழப்பீடு பெற்றவர் இது சுயமரியாதைக்கான போராட்டம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தான் வாங்கிய சிலிண்டரின் விலையை விட ரூ.1.50 அதிகமாக பெற்ற கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்த சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் இழப்பீடாக ரூ.4,000 பெற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது. ஆனால் சிலிண்டரை டெலிவரி செய்தவர் அவரிடமிருந்து 755 ரூபாய் வசூலித்துள்ளார். மீதம் 1.50 ரூபாயை சக்ரேஷ் கேட்டபோது அந்த பணத்தை கேஸ் ஏஜென்சியிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மனுதாரருக்கு 4000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இது மட்டுமன்றி சக்ரேஷிடம் பெற்ற ரூ1.50யை ஆண்டுக்கு 6% வட்டியுடன் சேர்த்து வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘இது வெறும் 1.50 ரூபாய்க்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல. எங்களது உரிமை மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம் இது’ என்று வழக்கில் வெற்றி பெற்ற சக்ரேஷ் தெரிவித்தார்.