சண்டிகர்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரூ.40 கோடி செலவில் 2000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் பஞ்சாப் காவல்துறை ஈடுபட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு ரூ.40 கோடியை ஒதுக்கியது.
இந்த திட்டத்தின் கீழ், 553 கி.மீ நீளமுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் காவல்துறை 2,000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து பாதுகாப்புப் பணிக்காக 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில், பஞ்சாப் இந்தியாவின் இரண்டாவது மிகவும் பாதுகாப்பான மாநிலம். “எல்லையில் 702 இடங்களில் 2,127 சிசிடிவி கேமராக்களை நிறுவி வருகிறோம். இதில் 100 BTZ, 243 ANPR மற்றும் 1,700 புல்லட் கேமராக்கள் அடங்கும். மத்திய அரசின் ஒப்புதலுடன், எல்லை தாண்டிய கடத்தலைத் தடுக்க ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
எல்லைப் பகுதியில் குற்றச் செயல்களைக் கண்டறிவதில் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.