புதுடில்லி: சமீபத்தில் சமோசா, ஜிலேபி, பக்கோடா போன்ற கார சுவையான உணவுகளில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் கொழுப்புகள் உடல்நலத்திற்கு தீங்கும் எனக் கூறி, இவை விற்கப்படும் கடைகளில் எச்சரிக்கை வாசகங்கள் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. இது சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்படி, மஹாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில் சோதனை ஓட்டமாக அந்த எச்சரிக்கை வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. உணவுப் பொருட்கள் உடல்நலனுக்கு உண்டாக்கும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கும் நோக்குடன் இந்த திட்டம் எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
எனினும், இந்த தகவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், சமோசா, ஜிலேபி போன்ற உணவுகள் குறித்து எச்சரிக்கை வாசகம் வைக்கவேண்டும் என எந்த உத்தரவும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை எனத் தெரிவித்தது. இது தொடர்பான செய்திகளில் உண்மை இல்லையென்று தெரிவித்த துறை, பொதுமக்கள் தவறான தகவல்களால் குழப்பம் அடையக்கூடாது எனவும் கூறியுள்ளது.
இதன் மூலம், சமோசா அல்லது ஜிலேபி மீது அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் வரப்போவதில்லை என்பது உறுதியாகிறது. இருப்பினும், உடல்நலக் கவனிப்பில் பொதுமக்கள் சுய பொறுப்புடன் உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே நியாயமான நிலைப்பாடாக அமைந்துள்ளது.