டெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. எனவே, தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது, மக்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். வானிலை மற்றும் அரசியல் மாசுபாடு காரணமாக டெல்லியில் தங்குவதற்கு மக்கள் கவலையடைந்துள்ளனர்.
அரசியல்வாதிகள் எப்பொழுதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல பொதுக் கொள்கை கொண்ட அரசு சமுதாயத்தை மாற்றும். டெல்லியில் செயல்படும் ஆம் ஆத்மி அரசு அரை இயந்திர அரசாக உள்ளது. டெல்லியில் வளர்ச்சி அடைய இரட்டை இயந்திர அரசு தேவை. டெல்லியில் வாழும் ஏழை மக்கள் சிந்திக்க வேண்டும்.
குடிசைகளில் நிரந்தரமாக வாழ வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மேலும், பட்ஜெட் 2025-க்கு எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். விக்ஷித் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நாங்கள் பாடுபடுவோம். பிரதமர் நரேந்திர மோடி கங்கையை சுத்தம் செய்தார். எனவே, டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், யமுனை நதியையும் மோடி சுத்தப்படுத்துவார்.