புதுடெல்லி: மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ இன்று (ஜூலை 29) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் முக்கிய சதிகாரராக கெஜ்ரிவால் இருப்பதாக சி.பி.ஐ.குற்றம் சாட்டியுள்ளது.
மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறையின் கைது சட்டவிரோதமானது எனக் கூறி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 12ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியிருந்தாலும், மற்றொரு வழக்கில் சிபிஐ அவரை கைது செய்துள்ளது. இதனால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குற்றச்சாட்டு
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ இன்று (ஜூலை 29) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில், “இந்த வழக்கில் முக்கிய சதிகாரர் கெஜ்ரிவால். டெல்லி மதுபானக் கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார்.
டெல்லி அரசின் அனைத்து முடிவுகளும் அவரது அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே எடுக்கப்பட்டன. கெஜ்ரிவால் மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.