மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் 41,385 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் பிரபுல்லா வினோத் ராவ் 27,323 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பா.ஜ., சார்பில், முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா சவான், போகர் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளரை விட, 6,338 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி-பச்பகடி தொகுதியில் சிவசேனா கட்சி சார்பில் 42,666 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாநில துணை முதல்வருமான அஜித் பவார் பாரமதி சட்டசபை தொகுதியில் 65,211 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
லத்தூர் தொகுதியில் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தீரஜ் தேஷ்முக் 19,541 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த சிவசேனா வேட்பாளர் மிலிந்த் தியோரா, வொர்லி தொகுதியில் 18,204 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மகா விகாஸ் கூட்டணி வேட்பாளர் ஆதித்யா தாக்கரே 17,607 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதனால், மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.