திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏ மொய்தீன், வயநாட்டில் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-
வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையின்படி, மாநில அரசு மத்திய அரசிடம் மறுவாழ்வுக்கு ரூ. 2,221 கோடி தேவை என மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் வரவில்லை. வயநாடு நிலச்சரிவை மிகப்பெரிய இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள அனைத்து எம்.பி.க்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வரை நிதியுதவி அளிக்கலாம்.
இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பெறப்பட்ட ரூ.712.98 கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படும். வயநாடு பகுதிக்கு வெளியே வசிக்க விரும்புபவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.