கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் இருந்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெரியாரின் வெற்றியை நினைவுகூரும் வகையில் வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டு நினைவிடம் 1994-ல் திறக்கப்பட்டது. நினைவிடம் சிதிலமடைந்ததால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.8.14 கோடி செலவில் புதுப்பிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் பெரியார் சிலை, பெரியாரின் வாழ்க்கையை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சி கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை அடங்கும். இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த நினைவிடத்தையும் நூலகத்தையும் டிசம்பர் 12-ம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்த விழாவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து கோட்டயம் செல்வார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர். முருகேசன் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில திமுக சார்பில் கேரள பாரம்பரிய பாணியில் செண்டை மேளம் அடித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும்.