புதுடில்லியில் உள்ள ‘கான்ஸ்டிடியூஷன்’ கிளப்பில் நடைபெற்ற தேர்தலில் பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார். பார்லிமென்டிற்கு அருகில் உள்ள இந்த கிளப்பில் எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும். 1,200 உறுப்பினர்கள் கொண்ட இந்த கிளப்பில் மாநாட்டு மண்டபம், நவீன உணவகம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
இந்த தேர்தலில் இரு தரப்பினரும் பாஜ கட்சியை சேர்ந்தவர்கள். ஒரு தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய செயலாளர் ராஜிவ் பிரதாப் ரூடி, மறுதரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் போட்டியிட்டனர். பீகாரை சேர்ந்த ரூடி, தனது செல்வாக்கை பயன்படுத்தி பிரபலங்களிடமும் ஆதரவை பெற்றார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பல்யானுக்கு நிஷிகாந்த் துபே ஆதரவளித்தார்.

நேற்று மாலை நடைபெற்ற ரகசிய வாக்குப்பதிவில் ரூடி தரப்பினர் வெற்றி பெற்றனர். ரூடி, “100க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம். இது பாஜ மட்டுமன்றி காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சை எம்பிக்கள் இணைந்த வெற்றி” எனக் குறிப்பிட்டார். மொத்தம் 1,295 வாக்காளர்களில் 707 பேர் வாக்களித்த நிலையில், 391 வாக்குகள் பெற்று 52% வாக்கு விகிதத்தில் வென்றார்.
நிஷிகாந்த் துபே, “வரலாற்றில் முதல்முறையாக 1,250 வாக்காளர்களில் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். பாஜ தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர்” என்றார். இந்த கிளப் தேர்தல் டில்லி அரசியலில் பெரிய பேச்சு பொருளாக மாறியுள்ளது.