டெல்லி: டெல்லி சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் அதிஷி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் 3 நாள் டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவையில் சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமையில் பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். 2வது நாளான இன்று, டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக அரசு முந்தைய ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் குறித்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன், 2-வது நாளாக இன்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி, டெல்லி முன்னாள் அமைச்சர் கோபால் ராய் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சட்டசபை சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீது பாஜக உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அதிஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நீதிபதி அம்பேத்கரை விட நரேந்திர மோடி சிறந்த தலைவரா என கேள்வி எழுப்பினார். டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டசபையில் இருந்த அம்பேத்கரின் படத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மோடியின் படத்தை வைத்தனர். அம்பேத்கரை புகழ்ந்து கோஷம் எழுப்பிய ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அம்பேத்கர் மீதான பாஜகவின் வெறுப்பை டெல்லி அரசின் நடவடிக்கைகள் காட்டுகின்றன என்று அதிஷி கூறினார்.