டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயிகளுக்கு காங்கிரஸ் வலுவான ஆதரவை வழங்கியதால், சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் நிலைக்கு பாஜ அரசு தள்ளப்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த பங்கும் இல்லை. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி விவசாயச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பிறகு, 2020 நவம்பரில் அந்தச் சட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட முதல் அரசு கெஜ்ரிவால் அரசு. விவசாயிகளுக்கு துரோகம் செய்து பாஜகவுக்கு அடிமைத்தனத்தைக் காட்டவே கெஜ்ரிவால் அரசு இதைச் செய்தது. பின்வாசல் வழியாக விவசாயச் சட்டங்களை மீண்டும் கொண்டுவர பாஜக திட்டமிட்டு வருவதாக கெஜ்ரிவால் கூறுகிறார். இதன் மூலம் விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, மலிவான அரசியல் ஆதாயங்களைப் பெற ஆம் ஆத்மி கட்சி இதைச் செய்கிறது. விவசாயிகளை ஆதரிப்பதாகக் கூறிய கெஜ்ரிவால், விவசாயச் சட்டங்களை அறிவித்தபோது தனது இரட்டை நிலை மற்றும் விவசாயி விரோதப் போக்கை வெளிப்படுத்தினார் என்று தேவேந்திர யாதவ் கூறினார்.
முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் இணையதளத்தில், “விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. புதிய கொள்கையின் நகல் மாநிலங்களின் கருத்துகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு பாஜக தான் பொறுப்பு” என்றார்.