டெல்லி: அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி மக்களவையில் நேற்று நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘சமீபகாலமாக அம்பேத்கர்.. அம்பேத்கர் என்று முழக்கமிடுவது நாகரீகமாகிவிட்டது. இதற்குப் பதிலாக இறைவனின் திருநாமத்தை பலமுறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.
அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதால் பாஜக மகிழ்ச்சியடைகிறது என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அமித்ஷா, அம்பேத்கரை காங்கிரஸ் அவமதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் கூறியதாவது; இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துள்ளார். அம்பேத்கர் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷாவின் பேச்சு, அம்பேத்கர் மட்டுமின்றி, அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது என்றார். மனுஸ்மிருதியைப் பின்பற்றுபவர்கள் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்க முடியாது என்பதை அமித்ஷாவின் பேச்சு உறுதி செய்துள்ளதாகவும், அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.