புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்களை விட நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும், இதனால் நிறுவனங்களை விட தனிநபர்கள் அதிக வரி செலுத்துவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை 1ம் தேதி வரை 3.61 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நிறுவன வரி வசூல் ரூ.2.65 லட்சம் கோடி மட்டுமே. நிறுவனங்களை விட தனிநபர்கள் அதிக வரி செலுத்துகிறார்கள் என்பதை இது விளக்குகிறது.
மன்மோகன் சிங் பதவி விலகும் போது தனிநபர் வருமான வரி 21 சதவீதமாகவும், கார்ப்பரேட் வரி 35 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், கார்ப்பரேட் வரி இன்று 26 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் தனிநபர்கள் செலுத்தும் வருமான வரி 28 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தனியார் முதலீடு அதிகரிக்கும் என்று 2019ல் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, மன்மோகன் ஆட்சியில் 35 சதவீதமாக இருந்த தனியார் முதலீடு, 2014-24ல் 29 சதவீதமாக குறைந்துள்ளது. தனிநபர்கள் அதிக வரி செலுத்தும் போது கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடி கோடீஸ்வரர்களின் பாக்கெட்டுகளுக்கு சென்றுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.