டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பாஜக கிண்டல் செய்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் குமார் வர்மா, எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்தியை பப்பு என்று குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருந்தார்.
ஆனால் சில மணி நேரங்களில் அந்த பதிவு நீக்கப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அதிகாரவர்க்கம் மற்றும் அரசியல் சார்பற்ற அதிகாரிகளின் அரசியல்மயமாக்கல் அதிகரித்துள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது.
ராகுல்காந்தியை பப்பு என்று கூறிய மாவட்ட ஆட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் கூறுகையில், “நொய்டா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கவுதம் புத்த நகர் மாவட்டத்தின் கலெக்டராக உள்ள மணீஷ் குமார் வர்மா, மாவட்டம் முழுவதும் பொறுப்பு வகிக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாஜகவின் நடவடிக்கையாகும். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், “பாஜக தலைமையிலான ஆட்சியில் இதுபோன்ற அரசியல் கருத்துகளை தெரிவிக்க ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இப்போது உத்தரவிடப்படுகிறதா?
கலெக்டர் மணீஷ்குமார் வர்மா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “எனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தை சமூகவிரோதிகள் ஹேக் செய்து ராகுல் காந்தி குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக எப்ஐஆரையும் வெளியிட்டுள்ளேன்,” என்றார்.