ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், மே மாத தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது. மே 26 அன்று, நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,010 ஆக இருந்தது. இது 30-ம் தேதி 2,710 ஆக அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று பரவலில் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முன்னணியில் உள்ளன. அதிகபட்சமாக கேரளாவில் 1,147, மகாராஷ்டிராவில் 424, டெல்லியில் 294, குஜராத்தில் 223, தமிழ்நாட்டில் 148 என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றுகளில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பஞ்சாபைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், தற்போதைய கொரோனா தொற்று பரவல் லேசானது என்றும், அது குறித்து பீதி அடையத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளனர்.