இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 7,400 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 269 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயரும் நிலையில் உள்ளது.

கொரோனா அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கர்நாடகாவில் ஒரே நாளில் 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து, குஜராத்தில் 79 பேர், கேரளாவில் 54 பேர், மத்திய பிரதேசத்தில் 20 பேர், தமிழகத்தில் 12 பேர் மற்றும் சிக்கிமில் 11 பேர் என பல்வேறு மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் 4 பேர், கேரளாவில் 3 பேர், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவர் என 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இன்று வரை மொத்தமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் பத்திரமாக இருக்கவும், பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.