மும்பை, உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் அச்சம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத சூழலில், மீண்டும் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் சில பகுதிகளில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கூறும் சுகாதாரத்துறை, தற்போது மொத்தம் 93 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 18 பேர் புதிய தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையிலும் புதிய அபாயக் கட்டுக்குள் நகரம் நுழைந்திருக்கிறது.
மஹாராஷ்டிரா சுகாதாரத்துறையின் தகவலின்படி, மும்பையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இருவரும் இணை நோய்களுடன் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஒருவருக்கு வலிப்பு நோயும், மற்றொருவருக்கு புற்றுநோய் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் மும்பையில் மட்டும் 6,066 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 106 மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த 106 தொற்று சம்பவங்களில் 101 மும்பையில் இருந்து பதிவாகியுள்ளன. பாக்கி 5 சம்பவங்கள் புனே, தானே மற்றும் கோலாப்பூர் பகுதிகளில் உள்ளவை.
தற்போதைய நிலவரப்படி, 52 பேர் லேசான அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர். மேலும் 16 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்வு பெற்றுள்ள நிலையில், சுகாதாரத்துறை அவதானத்துடன் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், மாநிலங்கள் அனைத்தும் சீரான கண்காணிப்பிலும், சுகாதார ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்தக் கட்டத்தில் மக்கள் அவசரமில்லாமல் சளி, இருமல் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாக கருதப்படுகிறது. தேவையான போது முகக்கவசம், கைதுவைக்கும் பொருட்கள், சமூக இடைவெளி போன்ற அடிப்படை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.