புதுடில்லி: சட்டவிரோத மணல் அள்ளுவதை தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் 6 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கடைசி அவகாசம் அளித்துள்ளது. தாக்கல் செய்யாவிட்டால், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளது.
சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சுவாமி என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், 2018ல் வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு, சிபிஐ மற்றும் 5 மாநிலங்களுக்கு 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசுக்கு இழப்பு
இதில், பஞ்சாப் அரசு மட்டும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. சுற்றுச்சூழலுடன், பொதுமக்களின் நலன்களும் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
தொடர்ந்து, அமர்வு கூறியது:
இந்த நான்கு மாநிலங்களும் இது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை மிகக் குறைவாக இருந்தாலும், இந்த மாநிலங்களுக்கு அவற்றின் பொறுப்பை உணர்த்தும் வகையில் இது விதிக்கப்படும்.
இவ்வாறு அந்த அமர்வு கூறியுள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக நிலவரம் குறித்து தனி துணைக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட பெஞ்ச், இதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பல மாநிலங்களில் ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஓரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அமோகமாக நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசு நிர்வாகத்தின் முறையான அனுமதியின்றி, லைசென்ஸ் அளவை தாண்டி இதுபோன்ற கொள்ளை நடப்பது அரசு நிர்வாகங்களுக்கு தெரிவதில்லை.
சி.பி.ஐ., விசாரணை
மாநில அரசுகளின் சரியான விதிமுறைகள் இல்லாததால் மணல் கொள்ளை மிகப்பெரிய மோசடியாக மாறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன், குடிமக்களின் உரிமைகளையும் பறிக்கிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் இதுபோன்ற மணல் குவாரிகளை அனுமதிக்கக் கூடாது.
இதுவரை நடந்த மணல் கொள்ளைகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டவிரோத மணல் கொள்ளையால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும், கும்பல் நடமாட்டமும் உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
குறிப்பிட்ட அளவு உரிமம் பெற்று மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.