புதுடெல்லி: பத்திரிக்கையாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சிபிஎம் எம்பி சிவதாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் பேசிய சிவதாசன், “எல்லைகளற்ற நிருபர்கள் என்ற அமைப்பு 2024ம் ஆண்டு வெளியிட்ட பத்திரிகை சுதந்திர குறியீட்டின் பதிப்பில், 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட சற்று முன்னேற்றம் காணப்பட்டாலும், சமீப காலமாக இந்தியாவின் செயல்பாடு தொடர்ந்து மோசமாகவே உள்ளது.
சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பத்திரிகையாளர்களான பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சித்திக் கப்பன் ஆகியோரின் கைதுகள் இதற்கு உதாரணம். கடந்த பத்து ஆண்டுகளில், பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகம் சுரண்டப்படும் குழுக்களில் பத்திரிகையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பத்திரிகையாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்,” என வலியுறுத்தினார்.