இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் பதுங்கியிருந்த இரண்டு குற்றவாளிகள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இன்டர்போல் என்பது 195 நாடுகளுக்கு உட்பட்ட சர்வதேச போலீசின் அமைப்பு ஆகும். இது உலகம் முழுவதும், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மூலம், நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளையும் சர்வதேச அளவில் நடக்கும் முக்கிய குற்றங்களைப் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
இன்டர்போல் இந்த நடவடிக்கைகளுக்கு 8 வகை நோட்டீஸ் வெளியிடுகிறது. ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, ஒரு நாட்டில் தேடப்படும் நபரை வேறு ஒரு நாட்டில் கைது செய்ய உதவும் முக்கியமான கருவியாக இருக்கிறது. இந்நிலையில், சி.பி.ஐ. மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகள் தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் பதுங்கி இருந்தனர்.
வீரேந்திரபாய் மணிபாய் படேல் மற்றும் ஜனார்த்தனன் சுந்தரம் ஆகிய இருவரும் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டனர். இதில், ஜனார்த்தனன் சுந்தரம் மீது ரூ.87 கோடி முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்த குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இவர் தாய்லாந்து பாங்காக்கில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டார். தொடர்ந்து, கோல்கட்டா விமான நிலையத்தில் தமிழக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜனார்த்தனன் சுந்தரத்தின் மீது கிரிமினல் சதி, ஏமாற்றுதல், வட்டியை திருப்பி செலுத்த தவறுதல் என பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.