டெல்லி: விவசாய கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. டெல்லியின் காற்று மாசு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
டெல்லியின் காற்றுத் தர மேலாண்மை அமைப்பின்படி, காற்றில் உள்ள 2.5 μm துகள்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் காற்றின் தரக் குறியீட்டில் 10 சதவீதம் மட்டுமே விவசாயக் கழிவுகளை எரிப்பதால் மாசுபடுகிறது. நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, தலைவலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் நுரையீரல் தொடர்பான நோய்கள் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.