மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த பணமோசடி வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றமும் செப்டம்பர் 13-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நான் அரசு ஊழியராக இருந்தபோது என் மீதான வழக்கு தொடர உரிய அனுமதி பெறவில்லை.
எனவே, என் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக பதில் அளிக்க அமலாக்க இயக்குனரகத்துக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி குமார் ஓரி உத்தரவிட்டார். இந்நிலையில், அமலாக்க இயக்குனரகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.