திருமலை: பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அன்னப்பிரசாதத்தின் தரத்தை உயர்த்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. தென்னிந்திய சமையல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சுவை, தரம் மற்றும் அதிநவீன உபகரணங்களுடன் பொருத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த என்.டி.ராமராவின் ஆட்சிக் காலத்தில் திருமலையில் தினமும் 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டது. அதன்பின், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை, அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டியில், இத்திட்டத்தை செயல்படுத்த, என்.டி.ராமாராவ் அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 1983ம் ஆண்டு முதல் தொடர்ந்து 41 ஆண்டுகளாக திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது தேவஸ்தானம்.
தற்போது உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. இதற்காக தமிழகத்தின் வேலூர், சென்னை, விழுப்புரம் என பல இடங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் இலவசமாக காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தரமான அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக வந்துள்ள தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், அன்னதானத்தை ஆய்வு செய்து தரத்தை மேம்படுத்த விரும்பினார். அரிசியின் தரம் உள்ளிட்ட பல விஷயங்களில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வந்தார். மேலும், தினமும் ஒரே உணவை சாப்பிடாமல், பல்வேறு சுவைகளுடன் கூடிய சுத்தமான உணவை பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என எண்ணினார். இதற்காக தென்னிந்திய சமையல் வல்லுநர் சங்கத்தை அழைத்து ஆலோசனை கேட்டார்.
சியாமளா ராவ் கூறுகையில், “ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேருக்கு 3 வேளை சமைத்து வழங்குவது எளிதான காரியம் அல்ல. தற்போது திருமலையில் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், புதிய சுவையுடன் தரமாக வழங்குவது நல்லது. இதனால், பழைய சமையல் பாத்திரங்கள் மாற்றப்பட்டு, நவீன சமையல் கருவிகளும் விரைவில் வாங்கப்படும்,” என்றார்.