திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வாகனங்கள் மட்டுமின்றி, பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருப்பதியிலிருந்து திருமலைக்கு சந்திரகிரி அருகே ஸ்ரீவாரி மிட்டா மலைப்பாதையும், அலிபிரி பகுதியில் முக்கிய மலைப்பாதையும் உள்ளது.
இதில், அலிபிரி மலைப்பாதையில் 24 மணி நேரமும் பக்தர்கள் நடமாட்டம் உள்ளது. ஆனால் ஸ்ரீவாரி மிட்டா பாதை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால், பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில், ஸ்ரீவாரி மிட்ட அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான கட்டுப்பாட்டு அலுவலகம் அருகே, பக்தர்கள் செல்லும் வழியில், சிறுத்தை ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தது.
இரவு காவலாளி உடனடியாக தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அங்கு தெருநாய்களை வேட்டையாட வந்த சிறுத்தை, மனித நடமாட்டம் காரணமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சத்துடன் மலைப்பாதையில் சென்றனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:-
ஸ்ரீவாரி மிட்டா பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. அவ்வழியாக செல்லும் பக்தர்கள் கொண்டு வரும் உணவை நாய்களுக்கு அங்கு போடுகின்றனர். நாய்களை வேட்டையாட நள்ளிரவில் சிறுத்தைகள் சுற்றித் திரிகின்றன.
எனவே, வன விலங்குகள், நாய்களுக்கு உணவு வழங்குவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.