திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்தனர். இரவு 11.30 மணியளவில் திருமலை கோயில் மற்றும் மாடவீதியில் புத்தாண்டை வரவேற்க ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறக்கும்போது, பக்தர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு லட்டு பிரசாதம் மற்றும் சாக்லேட்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் பக்தர்கள் அனைவரும் ஏழுமலையான் கோயில் கோபுரம் அருகே கோவிந்தா கோபாலா போன்ற பக்தி பாடல்களை பாடி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 62,495 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19,298 பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். நேற்று இரவு நோட்டுகளில் காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், 3.80 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இன்று காலை முதல் ஆங்கில புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.