விமானப் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அனைத்து விமானத்திலும் குறைந்தது 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜன்னலோரம் மற்றும் வழிப்பாதை இருக்கைகளுக்கும், கால்களை நீட்டி அமரும் வசதி கொண்ட இருக்கைகளுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விமானத்தில் மிகச் சில இருக்கைகள் மட்டுமே கூடுதல் கட்டணம் இல்லாமல் கிடைக்கின்றன என்பது புகார். இது பற்றி சமூக வலைதளங்கள் வாயிலாக பயணிகள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் மற்றும் செல்லப்பிராணிகளைக் கொண்டு செல்வதற்கான தெளிவான மற்றும் வெளிப்படையான கொள்கையை பின்பற்றுமாறும், விமானம் தாமதம், ரத்து போன்றவை குறித்து இணையதளம், மொபைல் செயலி, முன்பதிவு தளம் வழியே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.