புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 19.5 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை வசூலான நேரடி வரி விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தனிநபர் வருமான வரி வசூல் ரூ.3.64 லட்சம் கோடியாகவும், நிறுவன வரி வசூல் ரூ.2.1 லட்சம் கோடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டை விட தனிநபர் வருமான வரி வசூல் 24 சதவீதமும், கார்ப்பரேட் வரி வசூல் 12.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேபோல், வரி திரும்பப் பெறுவது ரூ.70,902 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 64.5 சதவீதம் அதிகமாகும்.
சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை வழங்கியது. தற்போது வரி வசூலும் அதிகரித்து வருவதால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.