முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பசேரா கிராமத்தைச் சேர்ந்த ஹாசன் மற்றும் அஸ்மா ஆகியோர் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், அஸ்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் திருமணம் செய்து கொண்டதிலிருந்து, என் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து என்னைத் துன்புறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நான் என் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளேன். மார்ச் 31 அன்று, என் கணவர் வாட்ஸ்அப்பில் மூன்று முறை ‘தலாக்’ பதிவிட்டு என்னை விவாகரத்து செய்தார். இது சட்டவிரோதமானது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவர் தனது புகாரில் இவ்வாறு கூறியிருந்தார். காவல்துறை அதிகாரி ரவிசங்கர் கூறுகையில், “அஸ்மா அளித்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்மாவின் கணவர் ஹாசன், அவரது தாயார் ரஷிதா மற்றும் இரண்டு சகோதரர்கள் இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.